நீதிமொழி 17:12-22

நீதிமொழி 17:12-22 TCV

தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது. ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது. வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு. குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது.