பிலிப்பியர் 3:8-16

பிலிப்பியர் 3:8-16 TCV

அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன். நான் அவரோடு, இணைந்திருக்கவே விரும்புகிறேன். மோசேயின் சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதி இறைவனிலிருந்து விசுவாசத்தினால் வருகிறதாயிருக்கிறது. நான் கிறிஸ்துவை அறியவும், அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறியவும் விரும்புகிறேன். அத்துடன் அவருடைய மரணத்தில் அவரைப் போலாகி, அவருடைய துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஐக்கியத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும். இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன். பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன். நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார். எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம்.

பிலிப்பியர் 3:8-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்