பிலிப்பியர் 2:14-26

பிலிப்பியர் 2:14-26 TCV

முறுமுறுப்பில்லாமலும், வாதாடாமலும் எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் குற்றமற்றவர்களும், தூய்மையானவர்களுமான “பிழையேதுமில்லாத இறைவனுடைய பிள்ளைகளாய், நெறிகெட்ட சீர்கேடான இந்தத் தலைமுறையினரிடையே இருப்பீர்கள்.” அவர்களிடையே, நீங்கள் வான மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பீர்கள். நீங்கள் வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்து கொண்டவர்களாயிருந்தால் நான் ஓடிய ஓட்டமும், எனது உழைப்பும் வீணாகவில்லை என்று நான் கிறிஸ்து திரும்பிவரும் நாளில் பெருமையடைவேன். ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். அன்றியும் தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவில் நான் எதிர்பார்க்கிறேன். அப்பொழுது அவன்மூலம் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உற்சாகமடைவேன். அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை. ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு இங்கே என்ன நடக்கும் என்று நான் அறிந்தவுடனே, அவனை உங்களிடம் அனுப்பலாம் என எதிர்பார்க்கிறேன். நானும் உங்களிடம் விரைவில் வருவேன் என்று கர்த்தரில் மனவுறுதியாயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது என்னுடைய தேவைகளில் எனக்கு உதவிசெய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன். அவன் என் சகோதரனும் உடன் ஊழியனும், என் உடனொத்த போர் வீரனுமாயிருக்கிறான். அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாயிருக்கிறான். தான் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதினால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான்.