பிலேமோன் 1:8-19

பிலேமோன் 1:8-19 TCV

எனவே நீ என்ன செய்யவேண்டும் என்பதை, உனக்குக் கட்டளையிட்டுச் சொல்ல, கிறிஸ்துவில் நான் துணிவுடையவனாய் இருந்தாலும், நான் அன்பின் அடிப்படையிலேயே உன்னிடம் வேண்டுகிறேன். எனவே வயது சென்றவனும், இப்பொழுது கிறிஸ்து இயேசுவின் பொருட்டு சிறைக்கைதியாய் இருக்கிறவனுமான பவுலாகிய நான், எனது மகன் ஒநேசிமுவுக்காகவே உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். நான் விலங்கிடப்பட்டிருக்கையில் அவன் எனக்கு மகனானான். முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ, அவன் உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான். என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, நான் உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன். நற்செய்திக்காக இங்கு விலங்கிடப்பட்டிருக்கிற எனக்கு உதவிசெய்யும்படி, உனக்குப் பதிலாய் ஒநேசிமுவை என்னுடன் வைத்திருக்க நான் விரும்பினேன். ஆனால் உன்னுடைய சம்மதமின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில், நீ செய்கிற எந்த உதவியையும் நீயாக மனமுவந்து செய்ய வேண்டுமேயன்றி, எனது வற்புறுத்தலின் பேரில் அதைச் செய்யக்கூடாது என்று நான் எண்ணினேன். சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். அதாவது இனிமேலும் அவன் அடிமையாய் அல்ல, அடிமையைவிட பயனுள்ள அன்புக்குரிய சகோதரனாக உன்னுடன் இருக்கும்படியே ஏற்றுக்கொள்ளும். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன். ஆனாலும் அதைவிட ஒரு மனிதன் என்ற வகையிலும், கர்த்தரில் ஒரு சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கிறான். ஆகவே நான் உனக்கு ஐக்கியமானவன் என்று நீ எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள். அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு. நான் அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நான் இதை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இவ்வேளையில், உன்னையே நீ எனக்குக் கொடுக்கவேண்டியவனாய் இருக்கிறாய் என்று நான் உனக்குச் சொல்லவேண்டியதில்லை.

Video for பிலேமோன் 1:8-19