பிலேமோன் 1:10-18

பிலேமோன் 1:10-18 TCV

எனது மகன் ஒநேசிமுவுக்காகவே உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். நான் விலங்கிடப்பட்டிருக்கையில் அவன் எனக்கு மகனானான். முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ, அவன் உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான். என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, நான் உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன். நற்செய்திக்காக இங்கு விலங்கிடப்பட்டிருக்கிற எனக்கு உதவிசெய்யும்படி, உனக்குப் பதிலாய் ஒநேசிமுவை என்னுடன் வைத்திருக்க நான் விரும்பினேன். ஆனால் உன்னுடைய சம்மதமின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில், நீ செய்கிற எந்த உதவியையும் நீயாக மனமுவந்து செய்ய வேண்டுமேயன்றி, எனது வற்புறுத்தலின் பேரில் அதைச் செய்யக்கூடாது என்று நான் எண்ணினேன். சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். அதாவது இனிமேலும் அவன் அடிமையாய் அல்ல, அடிமையைவிட பயனுள்ள அன்புக்குரிய சகோதரனாக உன்னுடன் இருக்கும்படியே ஏற்றுக்கொள்ளும். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன். ஆனாலும் அதைவிட ஒரு மனிதன் என்ற வகையிலும், கர்த்தரில் ஒரு சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கிறான். ஆகவே நான் உனக்கு ஐக்கியமானவன் என்று நீ எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள். அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்