எண்ணாகமம் 27:1-11

எண்ணாகமம் 27:1-11 TCV

செலொப்பியாத்தின் மகள்கள், யோசேப்பின் மகன் மனாசேயின் வம்சங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இந்த செலொப்பியாத் எப்பேரின் மகன். ஏப்பேர் கீலேயாத்தின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். மாக்கீர் மனாசேயின் மகன். செலொப்பியாத்தின் மகள்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோர். அவர்கள் சபைக் கூடாரவாசலுக்குச் சமீபமாய் வந்து, மோசேக்கும், ஆசாரியன் எலெயாசாருக்கும், தலைவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் முன்பாக நின்றார்கள். அப்பெண்கள் அவர்களிடம், “எங்கள் தகப்பன் பாலைவனத்தில் இறந்துவிட்டார். யெகோவாவுக்கு விரோதமாக ஒன்றுகூடி கோராகைப் பின்பற்றியவர்களின் மத்தியில் அவர் இருக்கவில்லை. அவர் தன்னுடைய பாவத்தினாலேயே இறந்துவிட்டார். அவருக்கு மகன்கள் ஒருவரும் இல்லை. அவருக்கு மகன்கள் இல்லாதபடியால், எங்களுடைய தகப்பனின் பெயர் அவருடைய வம்சத்திலிருந்து இல்லாமல் போகவேண்டியதேன்? எங்கள் தகப்பனின் உறவினர்களுக்குள்ளே எங்களுக்கும் காணி தரவேண்டும்” என்றார்கள். மோசே அவர்களுடைய கோரிக்கையை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்தான். யெகோவா அவனிடம், “செலொப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரியானதே. நீ அவர்களுக்குச் சொத்துரிமையாக அவர்கள் தகப்பனின் உறவினர்கள் மத்தியில் காணியைக் கொடுக்கவேண்டும். இவ்விதமாய் நீ அவர்களுடைய தகப்பனின் சொத்துரிமையை அவர்களிடம் ஒப்புவிக்கவேண்டும். “நீ இஸ்ரயேலருடன் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு மனிதன் மகன் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய மகளுக்கு ஒப்புவிக்கவேண்டும். அவனுக்கு மகளும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய தகப்பனின் சகோதரர்களிடம் கொடுக்கவேண்டும். அவனுடைய தகப்பனுக்கும் சகோதரன் இல்லாதிருந்தால், அவனுடைய வம்சத்தில் அவனுக்கு நெருங்கிய உறவினனுக்கு அதைக் கொடுக்கவேண்டும். அவன் அதை உரிமையாக்கிக் கொள்ளட்டும். இது யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலருக்கு ஒரு சட்டபூர்வமான நடைமுறையாக இருக்கவேண்டும்’ ” என்றார்.