முதலாம் மாதத்தில் முழு இஸ்ரயேல் சமுதாயமும் சீன் பாலைவனத்தை அடைந்தது. அவர்கள் காதேசில் தங்கினார்கள். அங்கே மிரியாம் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டாள். இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள். அவர்கள் மோசேயுடன் வாக்குவாதம்பண்ணிச் சொன்னதாவது, “எங்கள் சகோதரர்கள் யெகோவா முன்பாக செத்து விழுந்தபோது நாங்களும் செத்திருக்கலாமே! நாங்களும், எங்கள் கால்நடைகளும் சாகும்படியாக நீ ஏன் யெகோவாவின் மக்களை இந்தப் பாலைவனத்திற்குக் கொண்டுவந்தாய்? நீ ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே, இந்த அவலம் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்தாய்? இங்கே தானியமோ, அத்திப்பழங்களோ, திராட்சைக்கொடிகளோ, மாதுளம்பழங்களோ இல்லை. குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லை” என்றார்கள். அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான். அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான். பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது, “நீங்கள் என்னைக் கனம்பண்ணும் அளவுக்கு என்னில் நம்பிக்கை வைக்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக என்னைப் பரிசுத்த இறைவனாகக் கனம்பண்ணவில்லை. எனவே நான் இந்த சமுதாயத்திற்குக் கொடுக்கும் நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டுபோகமாட்டீர்கள்” என்றார். அவ்விடத்தில் இஸ்ரயேலர் யெகோவாவுடன் வாக்குவாதப்பட்டதாலும், அவர் தம்மை பரிசுத்தராகக் காண்பித்ததாலும், அது மேரிபாவின் தண்ணீர் எனப்பட்டது.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் எண்ணாகமம் 20
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எண்ணாகமம் 20:1-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்