நெகேமியா 9:13-21

நெகேமியா 9:13-21 TCV

“நீர் சீனாய் மலையின்மேல் வந்து இறங்கினீர், நீர் வானத்திலிருந்து அவர்களுடன் பேசினீர். அவர்களுக்கு நீதியும் நியாயமுமான ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், நலமான விதிமுறைகளையும், கட்டளைகளையும் கொடுத்தீர். நீர் உமது பரிசுத்த ஓய்வுநாளையும், அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது அடியவனான மோசே மூலம் கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்களின் பசியைத் தீர்க்க வானத்திலிருந்து அப்பத்தைக் கொடுத்தீர், அவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு கற்பாறையிலிருந்து தண்ணீரையும் வரச்செய்தீர். மேலும் அவர்களுக்குக் கொடுப்பதாக நீர் உமது உயர்த்திய கரத்தினால் வாக்குப்பண்ணிய நாட்டிற்குப்போய், அதை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவர்களுக்குச் சொன்னீர். “ஆனால் எங்கள் முற்பிதாக்களான அவர்கள், அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்களாய் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் உமக்குச் செவிகொடுக்க மறுத்து, நீர் அவர்கள் நடுவில் நடப்பித்த அற்புதங்களையும் நினைவிற்கொள்ளத் தவறினார்கள். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாகி, கலகம்பண்ணி, தங்கள் அடிமைத்தன வாழ்விற்குத் திரும்பிப்போகும்படி ஒரு தலைவனையும் நியமித்தார்கள். ஆனாலும் நீர் மன்னிக்கிறவரும், கிருபையுள்ளவரும், கருணையுள்ளவரும், கோபிப்பதற்குத் தாமதிப்பவரும், நேர்மையான அன்பில் நிறைந்தவருமான இறைவனாயிருக்கிறீர். அதனால் அவர்களை நீர் கைவிடவில்லை. அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியின் உருவச்சிலையை வார்ப்பித்து, ‘எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த தெய்வம் இதுதான்’ என்று கூறி பயங்கரமான இறை நிந்தையைச் செய்தபோதுங்கூட நீர் அவர்களைக் கைவிடவில்லை. “உமது மிகுந்த கருணையினால் நீர் எங்கள் முற்பிதாக்களைப் பாலைவனத்தில் கைவிடவில்லை. பகலில் அவர்களை வழிநடத்திவந்த மேகத்தூணும் அவர்களுக்குப் பாதை காட்டாமல் விடவில்லை; இரவில் நெருப்புத்தூணும் அவர்கள் போகவேண்டிய பாதைக்கு வெளிச்சம் கொடுக்காமல் விடவில்லை. அவர்களை அறிவுறுத்தும்படி உமது நல்ல ஆவியானவரையும் கொடுத்தீர். அவர்களின் வாயிலிருந்து உமது மன்னாவையும் விலக்கவில்லை, தாகத்துக்குத் தண்ணீரையும் கொடுத்தீர். நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்தீர்; அவர்களுக்கு ஒன்றும் குறைவாய் இருக்கவில்லை. அவர்களின் உடைகள் பழைமையாகவுமில்லை, கால்கள் வீங்கவுமில்லை.