எல்லா மக்களும் தண்ணீர் வாசலின் முன்னேயுள்ள சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். யெகோவா இஸ்ரயேலருக்கென கட்டளையிட்டிருந்த மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி சட்ட ஆசிரியர் எஸ்றாவிடம் கூறினார்கள்.
எனவே ஏழாம் மாதம் முதலாம் நாளில், ஆண்களும் பெண்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய எல்லோரும் கூடியிருந்த சபைக்குமுன் மோசேயின் சட்ட புத்தகத்தை ஆசாரியன் எஸ்றா கொண்டுவந்தான். எஸ்றா தண்ணீர் வாசலின் முன்னால் இருந்த சதுக்கத்தைப் பார்த்தபடி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளங்கிக்கொள்ள ஆற்றலுள்ளவர்களுக்கு, அதிகாலையிலிருந்து நண்பகல்வரை மோசேயின் சட்டப் புத்தகத்தைச் சத்தமாக வாசித்தான்; எல்லா மக்களும் அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள்.
அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள்.
எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். அவன் அவர்களைவிட உயரத்தில் நின்றபடியால், எல்லா மக்களுக்கும் அவனைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் புத்தகத்தைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்றா மேன்மையுள்ள இறைவனாகிய யெகோவாவைத் துதித்தான்; மக்கள் யாவரும் தங்கள் கைகளை உயர்த்தி, “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பின்பு அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து யெகோவாவை வழிபட்டார்கள்.
மக்கள் அங்கு நின்றுகொண்டிருக்கையில், லேவியர்களான யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கெலித்தா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர் அவர்களுக்கு சட்டத்திலிருந்து அறிவுறுத்தினார்கள். அவர்கள் இறைவனுடைய சட்டப் புத்தகத்தை வாசித்து அதில் உள்ளவற்றை மக்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக தெளிவுபடுத்தினார்கள். அதனால் எல்லா மக்களும் அதை விளங்கிக்கொண்டனர்.
எல்லா மனிதரும் இறைவனுடைய சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதார்கள். அதனால் ஆளுநரான நெகேமியாவும், ஆசாரியனும், சட்ட ஆசிரியருமான எஸ்றாவும், மக்களுக்குக் போதித்துக்கொண்டிருந்த லேவியர்களும் எல்லா மக்களிடமும், “இந்த நாள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஆகவே நீங்கள் துக்கப்படவோ, அழவோ வேண்டாம்” என்றார்கள்.