நாகூம் 1:1-8

நாகூம் 1:1-8 TCV

நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம். யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன. அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்; ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார். பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன. லெபனோனின் பூக்கள் வாடுகின்றன. அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; குன்றுகள் உருகிப்போகும். அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும். உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள். அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன. யெகோவா நல்லவர், அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார். ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.

நாகூம் 1:1-8 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்