இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள். அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான். எனவே இயேசு அவனுடன் சென்றார்.
போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள். அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார். அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார்.
இயேசு பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிலிருந்து, சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் ஏன் போதகருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்?” என்றார்கள்.
அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல், ஜெப ஆலயத் தலைவனிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு” என்றார்.
பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார். பிறகு இயேசு உள்ளே போய் அவர்களிடம், “ஏன் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திப் புலம்புகிறீர்கள்? பிள்ளை சாகவில்லை, தூங்குகிறாள்” என்றார். அவர்களோ இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள்.
இயேசு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டபின், அந்தப் பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தன்னுடன் இருந்த சீடரையும் கூட்டிக்கொண்டு, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார். அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும். உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள். “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.