மாற்கு 15:1-15

மாற்கு 15:1-15 TCV

அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள். அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான். இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான். பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன். மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள். எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள். பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.