பின்பு இயேசு அவர்களுடனே உவமைகள் மூலம் பேசினார்: “ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, ஒரு திராட்சை ஆலையைக் கட்டி, அங்கு ஒரு காவல் கோபுரத்தையும் அமைத்தான். அதற்குப் பின்பு, அவன் அந்தத் திராட்சை தோட்டத்தைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, வேறொரு இடத்திற்குச் சென்றுவிட்டான். அறுவடைக்காலம் வந்தபோது, அந்த விவசாயிகளிடமிருந்து திராட்சைத் தோட்டத்தின் பழங்களின் பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த விவசாயிகளோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது அவன், வேறொரு வேலைக்காரனையும் அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் இவனையும் அடித்து தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். அவன் மறுபடியும் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொன்றுபோட்டார்கள். அவன் இன்னும் பலரை அனுப்பினான்; அவர்களில் சிலரை அவர்கள் அடித்தார்கள். மற்றவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
“இனிமேல் அனுப்புவதற்கு, அவனுடைய அன்பு மகன் மட்டுமே இருந்தான். ‘எனது மகனுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனை அனுப்பினான்.
“ஆனால் அந்த விவசாயிகளோ, ‘இவனே உரிமையாளன். வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்பொழுது இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.”
அப்படியானால், “அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்?” என்று கேட்டார். “நான் சொல்கிறேன், அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான். நீங்கள் இந்த வேதவசனத்தை வாசிக்கவில்லையா:
“ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
கர்த்தரே இதைச் செய்தார்.
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’”
என்றார்.
அப்பொழுது அவர்கள், இயேசுவைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்ததினால், அவரைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள்.
ஆனால் இயேசுவுக்கு அவர்களின் தந்திரம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை நான் பார்ப்பதற்கு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அந்த நாணயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், அப்படியானால், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியை விட்டு இறந்துபோனால், இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார். இங்கே ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான். அந்த விதவையை இரண்டாவது சகோதரன் திருமணம் செய்தான். ஆனால் அவனும் பிள்ளைகள் இல்லாமலே இறந்துபோனான். மூன்றாவது சகோதரனுக்கும் இதுவே நடந்தது. அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும், இறைவனுடைய வல்லமையையும் அறியாததினால் தவறுசெய்கிறீர்கள் அல்லவா? இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள இறைவனுடைய தூதர்களைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிர்த்தெழுவதைக் குறித்து நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்புதரில் தோன்றிய இறைவன் அவனிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கிறார். நீங்கள் இதைப்பற்றி மிகவும் தவறுசெய்கிறீர்கள்” என்றார்.