மாற்கு 1:29-38

மாற்கு 1:29-38 TCV

ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள். எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள். பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார். சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய காணொளிகள்