மத்தேயு 9:27-38

மத்தேயு 9:27-38 TCV

இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். “ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார். அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.

மத்தேயு 9:27-38 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்