மத்தேயு 28:1-10

மத்தேயு 28:1-10 TCV

ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கும்படி சென்றார்கள். அப்பொழுது திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லைப் புரட்டித் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்திருந்தான்: இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடைகள் உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. காவல் செய்த அந்தக் காவலாளர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கிச் செத்தவர்கள் போலானார்கள். அப்பொழுது இறைத்தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். “நீங்கள் விரைவாகப் போய், அவருடைய சீடர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார், உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்.’ இதோ நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றும் சொன்னான். எனவே, அந்தப் பெண்கள் பயமடைந்தவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் கல்லறையைவிட்டு விரைந்து, நடந்ததை சீடர்களிடம் சொல்லும்படி ஓடினார்கள். ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடமாய் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப்பிடித்து, அவரை வழிபட்டார்கள். இயேசு அவர்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.