மத்தேயு 27:11-26

மத்தேயு 27:11-26 TCV

இயேசுவைக் கொண்டுவந்து ஆளுநர் முன்னால் நிறுத்தினார்கள். ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். ஆனால் தலைமை ஆசாரியர்களாலும் மற்றும் யூதரின் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்ட போது அவர் பதில் ஒன்றும் கொடுக்கவில்லை. அப்பொழுது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான். ஆனால் இயேசு ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுமொழியாக எந்த ஒரு பதிலும் சொல்லாதது ஆளுநனை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. பண்டிகை நாளில் மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநனின் வழக்கமாயிருந்தது. அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி இருந்தான். எனவே காலையில் ஆளுநனின் வீட்டிற்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்யவேண்டும்: பரபாஸையா அல்லது கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டான். ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது பிலாத்துவுக்குத் தெரியும். பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்த குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில் அவர் நிமித்தம் நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள். ஆனால் தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யும்படியும், இயேசுவைக் கொலை செய்யும்படியும் கேட்பதற்காக, மக்களைத் தூண்டிவிட்டார்கள். “இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?” என ஆளுநன் கேட்டான். “பரபாஸை” என அவர்கள் பதிலளித்தார்கள். “அப்படியானால், கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள். தனது முயற்சியால் பயன் இல்லை என்றும், ஒரு புரட்சி எழும்புவதையும் பிலாத்து கண்டான்; எனவே அவன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மக்களுக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப்பழிக்கு நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான். அதற்கு எல்லா மக்களும், “அவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமரட்டும்” என்றார்கள். அப்பொழுது பரபாஸை அவர்களுக்காக பிலாத்து விடுதலையாக்கி, இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.

மத்தேயு 27:11-26 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்