மத்தேயு 26:59-75

மத்தேயு 26:59-75 TCV

தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள். பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள். பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள். அதற்கு அவன், “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான். பின்பு பேதுரு வெளியே முற்ற வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரி அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள். அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.