மத்தேயு 26:26-50

மத்தேயு 26:26-50 TCV

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், “ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன். அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’ என்று எழுதியிருக்கிறது. “ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” என்றான். இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார். ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள். பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்குபோய் மன்றாடும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள்.