மத்தேயு 26:17-30

மத்தேயு 26:17-30 TCV

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.