இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: “நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள். அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஆனாலும் பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.
இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார்.
பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய், “நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அவ்வேளையிலிருந்து யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.
புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார்.