மத்தேயு 26:1-13

மத்தேயு 26:1-13 TCV

இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: “நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள். அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஆனாலும் பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம் என்று சொல்லிக்கொண்டார்கள். இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார்.