மத்தேயு 25:14-23

மத்தேயு 25:14-23 TCV

“மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும். ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான். அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான். ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான். “நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.