மத்தேயு 21:1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11
மத்தேயு 21:1 TCV
அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே ஊருக்கு வந்தபோது, இயேசு இரண்டு சீடர்களை அனுப்பிச் சொன்னதாவது
மத்தேயு 21:2 TCV
“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.
மத்தேயு 21:3 TCV
யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை கர்த்தருக்கு தேவை’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பிவிடுவான்” என்றார்.
மத்தேயு 21:4 TCV
இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது
மத்தேயு 21:5 TCV
“சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார், தாழ்மையுள்ள அவர் கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் அமர்ந்து வருகிறார்.”
மத்தேயு 21:6 TCV
சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு அறிவுறுத்தியபடியே செய்தார்கள்.
மத்தேயு 21:7 TCV
அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்தார்கள். அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டதும், இயேசு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார்.
மத்தேயு 21:8 TCV
திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள்.
மத்தேயு 21:9 TCV
அவருக்கு முன்னும், பின்னுமாகச் சென்ற மக்கள் கூட்டம்: “தாவீதின் மகனுக்கு ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
மத்தேயு 21:10 TCV
இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள்.
மத்தேயு 21:11 TCV
மக்கள் கூட்டம் அதற்குப் பதிலாக, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” என்றார்கள்.