மத்தேயு 19:1-15
மத்தேயு 19:1-15 TCV
இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார். மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார். சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா” இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார். சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார். அதற்குப் பின்பு சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று, அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ, அவர்களைக் கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள். இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது” என்றார். அவர் பிள்ளைகள்மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.

