மத்தேயு 18:1-10

மத்தேயு 18:1-10 TCV

அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார். “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான். “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ! உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.