அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். ஏரோது தனது வேலைக்காரர்களிடம், “அவன் யோவான் ஸ்நானகனே; அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான்! அதனாலேயே, அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது” என்று சொன்னான்.
தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே, ஏரோது யோவானைக் கைதுசெய்து, அவனைக் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம்: “அவளை நீ வைத்திருப்பது சட்டத்திற்கு மாறானது” என்று சொல்லியிருந்தான். ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான். ஆனால் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் அவனை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள்.
ஏரோதின் பிறந்தநாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தனது ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும், அவன் அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி உத்தரவிட்டான். அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது. அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறுமியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோனாள். அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது, யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் நோயுள்ளவர்களைச் குணமாக்கினார்.
மாலை வேளையானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம். ஏற்கெனவே நேரமாகிவிட்டது. மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.
அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்.
“இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள்.
“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள்.