மத்தேயு 13:31-58

மத்தேயு 13:31-58 TCV

இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார். இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை. இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.” அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே. வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள். அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள். இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள். இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள். “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார். அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள். அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி, அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார். அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.