YouVersion Logo
Search Icon

மத்தேயு 1:18, 19, 20, 21, 22, 23, 24, 25

மத்தேயு 1:18 TCV

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது.

மத்தேயு 1:19 TCV

அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான்.

மத்தேயு 1:20 TCV

யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள்.

மத்தேயு 1:21 TCV

அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.

மத்தேயு 1:22 TCV

கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன

மத்தேயு 1:23 TCV

“ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.” இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே.

மத்தேயு 1:24 TCV

யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான்.

மத்தேயு 1:25 TCV

ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.