லூக்கா 9:18-62

லூக்கா 9:18-62 TCV

ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான். இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார். பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார். பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார். இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார். அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான். பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள். அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை. மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார். அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள். சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது. இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான். அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார். இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார். அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை. அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார். இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான். அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.

லூக்கா 9:18-62 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்