அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள். தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களுங்கூட அவருடனே சென்றார்கள். மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அவளிலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன. ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள்.
பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; அவை மிதிபட்டன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின. வேறுசில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிப்போட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன. அவை முளைத்து நூறுமடங்கு விளைச்சலைக் கொடுத்தன.”
இயேசு இதைச் சொல்லி முடித்தபின்பு, சத்தமாய்க் கூப்பிட்டு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள்,
“ ‘கண்டும் காணாதவர்களாகவும்;
கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’
“இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை. பாதை ஓரத்தில் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்கும் சிலரைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி சாத்தான் வந்து, அவ்வார்த்தையை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். கற்பாறையின்மேல் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது, சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டாலும், வேரில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; சோதிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகிறார்கள். ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ உண்மையும் நன்மையுமுள்ள இருதயம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு, பலன் கொடுக்கிறார்கள்.
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. அதை உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி ஒரு விளக்குத்தண்டின் மேலேயே வைப்பார்கள். எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. ஆகையால், நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாய் இருங்கள். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”
ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்க்கும்படி வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை. அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
அதற்கு இயேசு, “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்” என்றார்.