பின்னும் கர்த்தர் சொன்னது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போல் இருக்கிறார்கள்? அவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் கூப்பிட்டு,
“ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
நாங்கள் ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் அழவில்லை,’
என்று சொல்கிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள். மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். நீங்களோ, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள். இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள்.
இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
அவன், “போதகரே சொல்லும்” என்றான்.
அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார்.
அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான்.
இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.
பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கிறாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள். நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை, ஆனால் இந்தப் பெண் நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள். எனவே நான் உனக்குச் சொல்கிறேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவள் என்னிடத்தில் அதிகமாக அன்பு கூர்ந்தாளே. ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார்.
அதற்குப் பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கின்ற இவன் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ” என்றார்.