லூக்கா 5:17-26

லூக்கா 5:17-26 TCV

ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது. அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான். எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 5:17-26