லூக்கா 4:33-44

லூக்கா 4:33-44 TCV

ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, “நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது அந்த தீய ஆவி அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனை விழத்தள்ளி விட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் வெளியேறியது. எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை என்ன வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் வெளியேறுகின்றன!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது. இயேசு ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமியார் கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்; எனவே சிலர் அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் சுகமடைந்து எழுந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். சூரியன் மறையும்போது மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதியுடையவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் தமது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். அத்துடன் பலரில் இருந்த பிசாசுகளும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு, அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பிசாசுகள் அவரே கிறிஸ்து என்று அறிந்திருந்தபடியால், அவர் அவைகளைப் பேசுவதற்கு இடங்கொடாமல் அதட்டினார். அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போனார். மக்களோ அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாமல் தங்களுடன் இருக்கும்படி முயற்சிசெய்தார்கள். ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்ற பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். பிறகு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்.