அவர்கள் இயேசுவைக் கூட்டிக் கொண்டுபோகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் வந்துகொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மேல் வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்துபோகும்படி செய்தார்கள். அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். இயேசு அவர்களைத் திரும்பிப்பார்த்து, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழவேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். ஏனெனில், ‘மலடியாய் இருக்கிற பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; குழந்தையைப் பிரசவிக்காதவர்களும், குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
“ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’
என்றும் சொல்வார்கள்.
ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இவர்கள் இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்யமாட்டார்கள்?” என்றார்.
குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள்.
படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது.
இவர் யூதருடைய அரசன்.
அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான்.
ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான்.
பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார்.
அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார்.
நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். ஆனால் இயேசுவை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும், தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.