லூக்கா 23:1-25

லூக்கா 23:1-25 TCV

இதற்கு பின்பு கூடியிருந்த முழுக்கூட்டமும் எழுந்து, இயேசுவைப் பிலாத்துவிடம் கொண்டுசென்றார்கள். அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்க்கிறான். தன்னைக் கிறிஸ்து எனப்பட்ட அரசன் என்றும் சொல்லிக்கொள்கிறான்” என்று, அவர்மேல் குற்றம் சாட்டினார்கள். எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான். ஆனால் அவர்களோ, “இவன் தனது போதனையினாலே, யூதேயா முழுவதிலுமுள்ள மக்களைக் கலகப்படுத்துகிறான். இவன் கலிலேயா தொடங்கி, இங்கு வரை வந்துவிட்டான்” என்றார்கள். அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான். இயேசு ஏரோதுவின் அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் இயேசுவை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவ்வேளையில், ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான். ஏரோது இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்டகாலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததினால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். அவன் இயேசுவிடம் அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும் அங்கே நின்று ஆவேசத்தோடு குற்றம் சாட்டினார்கள். அப்பொழுது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரைக் கேலி செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு அலங்காரமான ஒரு மேலுடையை உடுத்தி, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள். பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூப்பிட்டு, அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே அவனை விசாரித்தேன். ஆனால், அவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஏரோதுவும் குற்றம் காணவில்லை. ஏனெனில், நீங்கள் காண்கிறபடி ஏரோது இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரண தண்டனை பெற்றுக்கொள்ளத்தக்க குற்றம் எதையும் இவன் செய்யவில்லை. எனவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். பண்டிகையின்போது, வழக்கத்தின்படி யாராவது ஒருவனை மக்களுக்கு விடுதலைசெய்ய வேண்டியிருந்தது. அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான். பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய விரும்பி, அவர்களிடம் மீண்டும் பேசினான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேற்கொண்டது. பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 23:1-25