லூக்கா 22:7-19

லூக்கா 22:7-19 TCV

அப்பொழுது பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடப்படும் நாளான புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், பஸ்காவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தை செய்யவேண்டும் என நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து போங்கள். வீட்டின் சொந்தக்காரனிடம், ‘எனது சீடர்களுடன் நான் பஸ்காவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கிறது என்று, போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள். அவன் உங்களுக்கு வசதி உள்ள ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுப்போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பந்தியில் உட்கார்ந்தார்கள். இயேசு அவர்களிடம், “நான் வேதனை அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்காவைச் சாப்பிடுவதற்கு ஆவலுடன் வாஞ்சையாய் இருக்கிறேன். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிடமாட்டேன்” என்றார். பாத்திரத்தை எடுத்த பின்பு, அவர் நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசு வரும்வரைக்கும் திராட்சைப்பழ இரசத்தை இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.