அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.
சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள்.
ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”
மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார்.
அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, “உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதபடி அது இப்பொழுதும், உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. உங்கள் பகைவர் பட்டணத்தைச்சுற்றி அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கும் நாட்கள் உங்கள்மேல் வரும். அவர்கள் உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கிற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிப்பார்கள். அவர்களோ, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி கட்டடங்களை இடித்துப் போடுவார்கள். ஏனெனில், இறைவன் உங்களிடம் வரும் காலத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை” என்றார்.
பின்பு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “எனது வீடு ஒரு ஜெபவீடாயிருக்கும் என்று எழுதியிருக்கிறதே; ஆனால், நீங்கள் அதைக் கள்வரின் குகையாக்கியிருக்கிறீர்கள்” என்றார்.
அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், மக்கள் தலைவர்களும், அவரைக் கொலைசெய்வதற்கு முயற்சிசெய்தார்கள். இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.