லூக்கா 19:1-27

லூக்கா 19:1-27 TCV

இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார். இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள். ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார். அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு சீக்கிரமாகவே வரப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்: “எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான். புறப்படும்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பத்து பொற்காசுகளைக் கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். “ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இவன் எங்கள்மேல் அரசனாவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். “ஆனால், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தான். பின்பு அவன், தான் சம்பளத்தைக் கொடுத்த வேலையாட்கள் இன்னும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறியும்படி, அவர்களை அழைத்தான். “முதலாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் பத்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், நல்ல வேலைக்காரனே, நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான். “இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான். “பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன். நீர் கடினமான மனிதர். ஆனபடியால், நான் பயந்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கிறேன்; நான் ஒரு கடினமான மனிதன், வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவன் என்றும் உனக்குத் தெரியும் அல்லவா? அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வட்டிக்கடையில் போடவில்லை? நான் திரும்பி வரும்போது அந்தப் பணத்தை வட்டியோடு வாங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்திருக்குமே’ என்றான். “பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான். “அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள். “அவன் அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். நான் தங்கள்மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களான அவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை என் கண் முன்பாகவே கொன்றுபோடுங்கள்’ என்றான்.”