லூக்கா 17:1-10

லூக்கா 17:1-10 TCV

இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ. இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும். எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு. அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார். அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள். அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும். “உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா? மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா? கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா? எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.