லூக்கா 15:17-24

லூக்கா 15:17-24 TCV

“அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான். எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். “மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான். “ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.