லூக்கா 13:1-8

லூக்கா 13:1-8 TCV

அப்பொழுது அங்கிருந்தவர்களில் சிலர் இயேசுவிடம், கலிலேயர் சிலரைப் பிலாத்து கொலைசெய்து, அவர்களுடைய இரத்தத்தை அவர்கள் செலுத்திய பலிகளுடனே கலந்துவிட்ட செயலைப் பற்றிச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “அந்த கலிலேயருக்கு இவை நேர்ந்ததால், அவர்கள் மற்றெல்லா கலிலேயரைப் பார்க்கிலும் மோசமான பாவிகளாய் இருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்தே போவீர்கள். சீலோவாமில் இருந்த கோபுரம் விழுந்தபோது, அதில் பதினெட்டுப்பேர் அகப்பட்டு இறந்தார்களே. எருசலேமில் வாழ்கிற மற்றெல்லோரையும்விட, அவர்கள் அதிக குற்றவாளிகள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்துபோவீர்கள்” என்றார். அதற்குப் பின்பு இயேசு அவர்களுக்கு இந்த உவமையையும் சொன்னார்: “ஒரு மனிதன் தனது திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டு வைத்திருந்தான். அவன் அதிலே பழத்தைத் தேடிப் போனபோது, அதில் பழம் எதுவும் காணப்படவில்லை. எனவே அவன், அந்தத் திராட்சைத் தோட்டக்காரனிடம், ‘நான் இந்த அத்திமரத்தில் பழங்களைத் தேடி மூன்று வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பழம் எதையுமே நான் காணவில்லை. இந்த மரத்தை வெட்டிப்போடு. ஏன் இந்த மரம் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான். “அதற்கு தோட்டக்காரன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதைவிட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.