லூக்கா 11:1-28

லூக்கா 11:1-28 TCV

ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடருக்கு மன்றாடப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கு மன்றாடப் போதியும்” என்றான். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்படியாக மன்றாடுங்கள், “ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக. எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிக்கிறோமே. எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல். எங்களைத் தீமையிலிருந்து விடுவியும்,’ ” என்றார். அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு. பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால், அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான். “ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது. “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!” ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும். சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது. “ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான். “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.” இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள். அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.