லேவியராகமம் 22:1-16

லேவியராகமம் 22:1-16 TCV

யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் எனக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைகளை மதித்து நடக்கும்படிச் சொல். இவ்விதமாய் அவர்கள் என் பரிசுத்த பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்காமல் இருப்பார்கள். நானே யெகோவா. “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் எவனும், சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருந்தும், இஸ்ரயேலர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைக்குச் சமீபமாய் வருவானாகில், அவன் என் சமுகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். நானே யெகோவா. “ ‘ஆரோனின் சந்ததிகளில் யாராவது, தொற்றும் தோல்வியாதி உள்ளவனாகவோ, உடல் கசிவு உள்ளவனாகவோ இருந்தால், அவன் சுத்திகரிக்கப்படும்வரை பரிசுத்த காணிக்கைகளை சாப்பிடக்கூடாது. சடலத்தால் கறைபட்ட ஏதாவதொன்றைத் தொடுவதினாலும், விந்து கசிவுள்ள ஒருவனைத் தொடுவதினாலும் அவன் அசுத்தமாயிருப்பான். அவன் தன்னை அசுத்தப்படுத்தக்கூடிய ஊரும்பிராணி ஒன்றைத் தொடுவதினாலும், எவ்வித அசுத்தத்தினாலும் தன்னை அசுத்தப்படுத்துகிற எவனையாவது தொடுவதினாலும் அசுத்தமாயிருப்பான். இப்படிப்பட்ட எதையும் தொடுபவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவன் தான் தண்ணீரில் முழுகினாலொழிய பரிசுத்த காணிக்கை எதையும் சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும்போது அவன் சுத்தமாவான். அதன்பின் அவன் பரிசுத்த காணிக்கைகளைச் சாப்பிடலாம். ஏனெனில், அவை அவனுடைய உணவாகும். செத்ததாகக் கண்டெடுக்கப்பட்ட எதையாவது அல்லது காட்டு மிருகங்களினால் கொல்லப்பட்ட எதையாவது சாப்பிடுவதினால் அவன் அசுத்தமாகக் கூடாது. நானே யெகோவா. “ ‘ஆசாரியர்கள் என் நியமங்களை அவமதித்து குற்றவாளிகளாகி சாகாதபடிக்கு, அவர்கள் அவற்றைக் கைக்கொள்ளவேண்டும். அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே. “ ‘ஆசாரியனின் குடும்பத்துக்குப் புறம்பான ஒருவனோ அல்லது ஆசாரியனின் விருந்தாளியோ அல்லது கூலியாளோ பரிசுத்த காணிக்கையைச் சாப்பிடக்கூடாது. ஆனால் ஆசாரியன் ஒரு அடிமையைப் பணம் கொடுத்து வாங்கினாலோ அல்லது ஒரு அடிமை அவன் வீட்டில் பிறந்தாலோ, அந்த அடிமை ஆசாரியனின் உணவைச் சாப்பிடலாம். ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை திருமணம் செய்தால், அவளும் பரிசுத்த கொடைகளில் எதையும் சாப்பிடக்கூடாது. ஆனால், ஒரு ஆசாரியனின் மகள் விதவையாக இருந்தாலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளாய் இருந்தாலோ, அவள் பிள்ளைகள் அற்றவளாய், தான் இளமையில் இருந்ததுபோலவே தன் தகப்பன் வீட்டில் வசிக்கும்படி திரும்பிவந்திருந்தால், அவள் தன் தகப்பனின் உணவைச் சாப்பிடலாம். அங்கீகரிக்கப்படாத யாராவது அதில் எதையும் சாப்பிடக்கூடாது. “ ‘யாரேனும் ஒருவன் தவறுதலாக பரிசுத்தமான காணிக்கையைச் சாப்பிட்டால், அக்காணிக்கைக்காக அவன் ஆசாரியனுக்குப் பதிலீடு செய்வதுடன், அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இஸ்ரயேலர் யெகோவாவுக்குச் செலுத்தும் பரிசுத்த காணிக்கைகளை ஆசாரியர்கள் தூய்மைக்கேடாக்கக் கூடாது. அப்பரிசுத்த காணிக்கைகளை அங்கீகரிக்கப்படாதவர்கள் சாப்பிட அனுமதிப்பதின் மூலம், அவர்கள்மேல் தண்டனைக்குரிய குற்றத்தை சுமத்தாமல் இருக்கவேண்டும். நானே யெகோவா, அவர்களைப் பரிசுத்தமாக்குகிறவர்’ ” என்றார்.