புலம்பல் 3:16-33

புலம்பல் 3:16-33 TCV

அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது. நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.” யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர். எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பது நல்லது. இளைஞனாய் இருக்கும்போதே அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது. யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும். அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும். ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை. அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது. அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.