யெகோவாவின் ஊழியன் மோசே இறந்தபின், மோசேயின் உதவியாளனான நூனின் மகனாகிய யோசுவாவிடம் யெகோவா கூறியதாவது: “என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துவிட்டான். நீயும் இந்த மக்களும் எழுந்து, நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்க இருக்கும் நாட்டிற்குள் போகும்படி, இப்பொழுதே யோர்தான் நதியைக் கடக்க ஆயத்தமாகுங்கள். மோசேக்கு நான் வாக்களித்தபடியே நீங்கள் காலடிவைக்கும் இடத்தையெல்லாம், நான் உங்களுக்குக் கொடுப்பேன். பாலைவனத்திலிருந்து, லெபனோன் வரைக்கும், யூப்ரட்டீஸ் நதியிலிருந்து, பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியருடைய நாடு முழுவதும் மேற்கேயுள்ள மத்தியத் தரைக்கடல் வரைக்கும் உங்களுக்குரிய பிரதேசத்தின் நிலப்பகுதி பரந்திருக்கும். உன் வாழ்நாளெல்லாம் உன்னை எதிர்த்து வெற்றிபெற எவனாலும் முடியாதிருக்கும். நான் மோசேயுடன் இருந்ததுபோல, உன்னுடனும் இருப்பேன்; நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலகவுமாட்டேன்; உன்னைக் கைவிடவுமாட்டேன். நீ பலங்கொண்டு தைரியமாய் இரு; ஏனெனில் நான் இந்த மக்களின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்ட நாட்டை அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி, நீ அவர்களை வழிநடத்துவாய். “பலங்கொண்டு மிகத்தைரியமாயிரு. என் ஊழியன் மோசே உனக்கு அளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கவனமாயிரு; அவற்றைவிட்டு வலதுபுறமோ இடதுபுறமோ நீ விலகாதே; அப்பொழுது நீ செல்லுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய். இந்த சட்டத்தின் புத்தகத்தை உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.”
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோசுவா 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோசுவா 1:1-9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்