யோபு 38:4-18

யோபு 38:4-18 TCV

“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல். அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே! அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே. “கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்? நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், காரிருளினால் அதைச் சுற்றியபோதும், நான் அதற்கு எல்லைகளை அமைத்துத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்? நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்? “உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு, அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ? இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ? முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன. கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது; உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும். “கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ? மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ? பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல்.

யோபு 38:4-18 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்