யோவான் 9:24-41

யோவான் 9:24-41 TCV

இரண்டாவது முறையும் அவர்கள் பார்வையற்றவனாயிருந்த அவனைக் கூப்பிட்டு, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். அதற்கு பார்வையற்றவனாயிருந்தவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமட்டும் தெரியும். நான் பார்வையற்றவனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்!” என்றான். அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள். அவன் அதற்குப் பதிலாக, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. மீண்டும் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான். அப்பொழுது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே. இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார். பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான். அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள். யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்பொழுது நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான். அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான். அப்பொழுது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கிறவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார். அப்பொழுது இயேசுவுடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றோர்களோ?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்களுக்கு இராது; ஆனால் உங்களால் பார்க்கமுடியும் என்று நீங்கள் சொல்கிறபடியால், குற்றம் உங்கள்மேல் இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய காணொளிகள்