யோவான் 6:5-13

யோவான் 6:5-13 TCV

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டார். அவர் பிலிப்புவிடம், “இந்த மக்கள் சாப்பிடும்படி உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார். அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இயேசு அதைக் கேட்டார். ஏனெனில் தாம் என்ன செய்யப்போகிறார் என்று அவர் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார். பிலிப்பு இயேசுவுக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி அளவு உணவு கொடுத்தால்கூட, இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் போதாதே!” என்றான். அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம், “இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரும் கூட்டமான மக்களுக்கு அது எப்படிப் போதும்?” என்றான். அதற்கு இயேசுவோ, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். அந்த இடமோ புல் நிறைந்த தரையாய் இருந்தது. எனவே மக்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். அப்பொழுது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியபின் அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு வேண்டியமட்டும் பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார். அவர்கள் எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டு முடிந்ததும், இயேசு சீடர்களிடம், “மீதியாயிருக்கும் அப்பத்துண்டுகளை சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஒன்றையும் வீணாக்கக் கூடாது” என்றார். அப்படியே அவர்கள் மீந்தவற்றைச் சேர்த்தெடுத்தார்கள். அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தின் துண்டுகளிலிருந்து சாப்பிட்டு மீதியாய் விடப்பட்டவற்றை அவர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.