யோவான் 6:22-44

யோவான் 6:22-44 TCV

மறுநாள் கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்றும், அதிலே இயேசு தமது சீடர்களுடன் ஏறவில்லை என்றும், சீடர்கள் மட்டுமே அதில் சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்கள். பின்பு திபேரியாவிலிருந்து சில படகுகள், கர்த்தர் நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த அப்பத்தை மக்கள் சாப்பிட்ட இடத்தின் அருகே வந்துசேர்ந்தன. எனவே அங்கு கூடிவந்த மக்கள், இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லையென்று கண்டார்கள். உடனே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு அங்கிருந்த கப்பல்களில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். கடலின் மறுகரையிலே அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே, எப்பொழுது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, இங்கே திருப்தியாகச் சாப்பிட்டதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்? என்னத்தைச் செய்வீர்? எங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு அவர் பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, என் பிதாவே பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவை உங்களுக்குக் கொடுக்கிறார். பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற நானே இறைவனின் உணவு” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எப்பொழுதும் இந்த உணவை நீர் எங்களுக்குத் தாரும்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நானே ஜீவ அப்பம். என்னிடம் வருகிறவன் ஒருபோதும் பசியுடன் போகமாட்டான். என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் தாகமடையமாட்டான். நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டு இன்னும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள். பிதா எனக்குக் கொடுக்கின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒருவரையும் நான் துரத்திவிடமாட்டேன். ஏனெனில் நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன். அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் நான் ஒருவரையும் இழந்துவிடக் கூடாது. கடைசி நாளிலே நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். “நானே பரலோகத்திலிருந்து கீழே வந்த உணவு” என்று இயேசு சொன்னதால், யூதர்களில் சிலர் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவைப்பற்றி, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்பொழுது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார். “என்னை அனுப்பிய பிதா, ஒருவனை ஈர்த்துக்கொள்ளாவிட்டால், ஒருவரும் என்னிடத்தில் வரமாட்டார்கள். என்னிடம் வருகிறவரையோ நான் கடைசி நாளில் எழுப்புவேன்.